வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடியாக பெற்ற பணத்தில் பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அலி, 24 இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய நிலையில், பஸ்சில் தன்னுடன் பயணித்த, பார்வையிழந்த மாற்றுத்திறனாளி சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கமலேசன் மகன் டேவிட், 38, என்பவருடன் தொடர்பு கிடைத்துள்ளது. அஸ்ரப் அலியின் மொபைல் எண்களை பெற்றுக் கொண்ட டேவிட், அடிக்கடி பேசி வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள, ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதை நம்பி கடந்த, 2019 மார்ச், 27 துவங்கி, மே, 13 வரையிலான கால கட்டத்தில், வேலைக்காக மூன்று தவணைகளாக, 4.25 லட்சம் ரூபாயை டேவிட்டிடம், அஸ்ரப் அலி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை வாங்கித் தரவில்லை;பணத்தையும் கொடுக்கவில்லை. இது குறித்து, அஸ்ரப் அலி சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், டேவிட்டை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பார்வையிழந்த டேவிட், பஸ்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டு, பயணிகளிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போன் எண்களை பெறுவதும், பின்னர் அவர்களிடம் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். தனக்கு அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆட்கள் இருப்பதாக கூறி பணத்தை பெறுவதும், அதை மோசடியில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், 62 பேரிடம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து, அதை வைத்து சேலத்தில், ஆறு மனைவி, கரூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோட்டில் தலா ஒரு மனைவி என மொத்தம், 10 மனைவியருடன் உள்ளார். இவர்களை தவிர, சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் தலா, இரண்டு கள்ளக்காதலிகள் என, மொத்தம், 10 பேரை வைத்துள்ளார். மோசடியில் கிடைக்கும் பணம் அனைத்தையும், மனைவியர், காதலிகளிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பார்வையிழந்த டேவிட்டின் அதிரடி வாக்குமூலம், விசாரணை நடத்திய போலீசாரை மட்டுமின்றி, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.