திண்டுக்கல் அருகே தாயை சுத்தியலால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த அச்ச ராஜக்காபட்டி சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனது மனைவி ஜெயா, மகன் கண்ணன் ஆகியோருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதைக்கு அடிமையான கண்ணனை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அடிக்கடி தப்பி வந்தகண்ணன் வீட்டில்இருந்தவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த கண்ணன், தாய் ஜெயா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் . அப்போது நாகராஜ் கண்ணனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியதாகச்சொல்லப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்த கண்ணன், தாய் ஜெயா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து ஜெயாவின் தலையில் கொடூரமாகதாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெயா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தாயை கொலை செய்த கண்ணன் அவரது உடல் அருகிலேயே சுத்தியலுடன் அமர்ந்திருந்தார். சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் ஜெயாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு
ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.