ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப்புற பகுதியான குன்மா, சைதமா, கங்கவா, மியாகி மற்றும் புகுஷிமா ஆகிய பகுதிகள் பெரிய சேதங்களை சந்தித்துள்ளன. ஷிசோகா என்ற பகுதியில் ஹஜிபிஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகள் பதிவாகியது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மீட்புப் பணியில் 27 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனிடையே ஹகிபிஸ் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேரிடரை சமாளிக்க ஜப்பான் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் சேதத்தில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் துயரமான நேரத்தில் ஜப்பான் மக்களுடன் இந்தியா துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.