குட்கா வழக்கு திமுகவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிய விதிகளை பின்பற்றி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக விடுக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 12ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்பதை இந்த வழக்கில் முடிவு செய்ய முடியாது என்றும், திமுக எம்.எல்.ஏக்கள் உரிமையை மீறியுள்ளார்களா என்ற முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்பி உள்ளாரே தவிர, முன் முடிவுகள் ஏதும் எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். உரிமைக்குழுவில் உள்ள அனைவருமே சபாநாயகர் தெரிவித்த கருத்துக்களைதான் கூறுவார்கள் என யூகிக்க முடியாது என்றும், உரிமை மீறல் பிரச்னையை முடிவு செய்வது சட்டப்பேரவை அதிகார வரம்புக்கு உட்பட்டது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். உரிய விதிகளை பின்பற்றி குட்கா வழக்கில் திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உரிமைக்குழுவுக்கு தடையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசில் சில குறைகள் இருப்பதால், அதற்கு பதிலாக புதிய நோட்டீசை அனுப்பலாம் என, நீதிபதிகள் தீர்ப்பளித்ததாக மாநில அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version