சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான வழக்கில், தி. மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு, திமுக உறுப்பினர்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் ஏற்கனவே இருந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, அதன் பிறகு அனுப்பப்பட்ட புதிய நோட்டீஸுக்கு தனி நீதிபதி தடை விதித்தது தவறு என்று வாதித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.