கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம் விழா விமரிசையாக நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடியில் சிங்கபுரி சுப்புராயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் 138-ம் ஆண்டு குருபூஜையான ஏகாதச ருத்ராபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில், உலக நன்மைக்காக, நான்கு வேதங்களில் மத்தியமாய்த் திகழும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது. 11 முறை பாராயணம் பாடியும், இசைத்தும் தேவார பன்னிசையுடன் பஞ்ச மூர்த்திகளுக்கும், உற்சவருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீசுப்புராய சுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.