சென்னையில் பிரியாணி கடை ஒன்றில் வெங்காயத்தை பாதுகாக்க “gun man” தேவை என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலையேற்றத்தையும், தட்டுப்பாட்டையும் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீப காலமாக நாட்டில் வெங்காயம் திருட்டு போன்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே 300 கிலோ வெங்காயத்தை விவசாயியிடம் இருந்து ஒரு கும்பல் திருடிச் சென்றது. இதனால் வெங்காயத்தை எப்படி பாதுகாப்பது என விவசாயிகளும், வியாபாரிகளும் கதிகலங்கி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செயல்படும் ‘தொப்பி வாப்பா’ என்னும் பிரியாணி கடை வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை என்று வித்தியாசமான முறையில் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.இந்த விளம்பர போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தால் வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காய் வைத்து சமாளித்து வருகிறோம் எனவும், தங்களுடைய அனைத்து கடைகளுக்கும் மாதம் மாதம் ஒன்றரை டன் வெங்காயம் வாங்குவதாகவும், அதன் விலை தற்போதைய நிலவரப்படி 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.