குல்பூஷண் ஜாதவ் வழக்கில், தனது வாதங்களை முன்வைத்த இந்தியா, பாகிஸ்தான் செயல்பாடு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தது.
இந்தியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, தான் முன் வைத்த வாதத்தில், குல்புஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா பல முறை முயற்சி செய்துள்ளதாகவும், ஆனால் பாகிஸ்தான் ஒருமுறை கூட ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். குல்பூஷண் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பாகிஸ்தான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், சட்ட உதவிகள் கூட செய்யாமல் தூக்கு தண்டனை விதித்திருப்பதாகவும், கூறினார். சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைப்படி ஜாதவுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கவில்லை என பாகிஸ்தான் மீது சால்வே சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது தொடர்பாக வரும் 20 ஆம் தேதி சால்வே பதில் மனு தாக்கல் செய்ய சர்வதேச நீதிமன்றம் அனுமதியளித்தது. குல்புஷன் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், 21 ஆம் தேதி வரை வழக்கு விசாரனை நடைபெறும் என்றும், அன்று பாகிஸ்தான் தனது இறுதி வாதத்தினை முன் வைக்க வேண்டும் என்று, சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.