குஜராத் வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை: நானாவதி-மேத்தா ஆணைய அறிக்கையில் தகவல்

கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் நரேந்திர மோடி தலைமையிலான அப்போதைய அரசுக்குத் தொடர்பு இல்லை என நீதிபதிகள் நானாவதி – மேத்தா ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ராவில் சமர்மதி விரைவு ரயிலின் கதவுகள் பூட்டப்பட்டுத் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் அயோத்திக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் 59 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடியதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் குஜராத் முதலமைச்சர், அமைச்சர்கள், காவல்துறையினருக்குத் தொடர்புள்ளதா என்பதையும், இது திட்டமிட்ட வன்முறையா என்பதையும் நீதிபதிகள் நானாவதி, மேத்தா ஆகியோர் கொண்ட ஆணையம் விசாரித்தது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் குஜராத் வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், இதில் நரேந்திர மோடி அரசுக்குத் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version