வாயு புயல் குஜராத்தில் கரையை கடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள அதி தீவிர புயலான வாயு புயல் இன்று பிற்பகல் குஜராத்தின் போர்பந்தர்-தியூ இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் குஜராத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் இருந்தனர். கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் கடற்படையினரும் ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் வாயு புயல் குஜராத்தில் கரையை கடக்க வாப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் போர்பந்தர் அருகே வாயு புயல் நகர்ந்து செல்லும் என்பதால் கடற்கரையோரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தளர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.