சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, பிரசாரம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அந்தவகையில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவு என தெரியும் படியும், கைவிரலால் வாக்குப் பதிவு செய்வதைப் போலவும் வரிசையாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.