கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து கடைகளின் நுழைவு வாயில்களிலும் சோப்பு, தண்ணீர் மற்றும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், கண்கள், மூக்கு, வாயை அடிக்கடி தொடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் கடைக்குள் ஒருவர் மட்டுமே சென்று பொருட்களை வாங்க வேண்டும் எனவும், 4 முதல் 5 பேர் வரை கடை வளாகத்தில் காத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கடைகளின் வளாகங்கள், வாடிக்கையாளர்கள் தொடும் மேஜை, கதவுகள், கைப்பிடிகளை தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஊழியர்களை மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுடன் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் எனவும் முகக்கவசம் கட்டாயம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருமல், காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்க கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.