கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் மணி என்ற நபர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 3563 கிலோ குட்கா பொருட்கள் பிடிபட்டன. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் மூன்று இடங்களில் சுமார் 18 ஆயிரத்து 406 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மூன்று நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தங்கராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ‘கொங்கு மெஸ்” மணி என்ற மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார். இவர் சில வாரங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தலைமையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தவர்.
அவர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றாக எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கோவையில் சட்டவிரோத குட்கா ஆலைகள் செயல்பட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதரவளித்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் சட்டவிரோத குட்கா விற்பனை கும்பல், தங்களுக்கு திமுகவே சரியான இடம் என கருதி அந்த கட்சியில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.