டிசம்பர் மாதத்திற்காக ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த பல்வேறு வரி முறைகள் ஒழிக்கப்பட்டு சரக்கு சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரி விதிக்கப்பட்டு வருகிறது. 2019 மார்ச் மாதம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 577 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. நவம்பரில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி 19 ஆயிரத்து 962 கோடி ரூபாயாகும். மாநில ஜிஎஸ்டி 26 ஆயிரத்து 792 கோடி ரூபாயாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 48 ஆயிரத்து 99 கோடி ரூபாயாகும். வரி மீதான மேல் வரி எட்டாயிரத்து 331 கோடி ரூபாயாகும். இந்த ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின் ஏழாவது முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.