ஆடம்பர பொருட்கள் மீதான வரியை குறைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஏ.சி., சிமெண்ட், டயர் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆடம்பர பொருட்கள் மீதான வரியை குறைப்பதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகுறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தீப்பட்டி, ஜவ்வரிசி, ஊறுகாய், விவசாய கருவிகள் மற்றும் ஜவுளி தொழில்களுக்கு பயன்படும் இயந்திர பாகங்களுக்கு வரிவிலக்கு தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
வணிகர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் தாக்கல் செய்யவேண்டிய சட்டப்படியான படிவங்கள், உள்ளீட்டு வரி வரவை பெறுவதற்கான உரிய தேதி மற்றும் தாமதக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
Discussion about this post