ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இஸ்ரோவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை வலுப்படுத்துவது மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் மூலம், இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

இந்தியாவின் 35-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஏ, இரண்டாயிரத்து 250 கிலோ எடை கொண்டது. ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு, விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய பயன்படும். வான்வழி தாக்குதலில் பெரிதும் உதவ இருக்கிறது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் 8 ஆண்டுகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version