டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமாரின் முகப்பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், போலி பேனாக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் பற்றி தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுமென்ற வாசகங்களுடன் சிபிசிஐடி போலீசார் சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினர்.
ஜெயக்குமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டை 23 ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கௌதமன் முன்னிலையில் ஜெயக்குமார் இன்று ஆஜரானார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.