கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கும் தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 250 படுக்கை வசதிகள் தயாராக உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 28 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்றவற்றை தீவிரப்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
காய்ச்சல் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்ககள் அமைக்க தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் விண்ணப்பித்தாலே, உடனடியாக அனுமதி வழங்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார். இஸ்ரேலில் 68 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், அங்கு முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவுவதாகவும், இயல்பு வாழ்க்கை மிக முக்கியம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.