அதிமுக ஆட்சியின் அரும்பெரும் சாதனைகள்! : தமிழக சட்டமன்றம் 2016-2021 ஒரு பார்வை..

2016 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 4 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அறிவித்த அரும்பெரும் திட்டங்கள் குறித்த தொகுப்பை காணலாம்..

“உயர்கல்வித் துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், கல்லூரி மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி பெறுவதற்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18ஆம் ஆண்டு கல்வி ஆண்டில், 100 கோடியே 31 லட்ச ரூபாய் செலவில் துவங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

2018-2019 ஆம் நிதியாண்டில், தமிழ் நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

2019-2020 ஆம் நிதியாண்டில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்கலைக்கழக அறிவியல் மையம் 5 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

“பள்ளிக்கல்வித்துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் (SMART CLASS ROOM) ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் அறிவித்தார்

2018-2019 ஆம் நிதியாண்டில், மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இப்பள்ளிகள் மாதிரி பள்ளிகள் செயல்படும் விதத்தில், 11 கோடி ரூபாய் செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

2019-20 ஆம் நிதியாண்டில், பள்ளி கல்வித்துறை மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும், கற்றல் விளைவுகளை ஆய்வு செய்து கொள்ள கடினமான பகுதிகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட்டு வகுப்பறை செயல்பாடுகள் மேம்படுத்திடவும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 66 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

“வேளாண்மை துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், விவசாயிகளுக்கு தரமான இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், வேளாண் விரிவாக்க சேவையினை மேம்படுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர், அதன் ஒரு பகுதியாக 2017-18ஆம் ஆண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

2012ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகள் வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு 2018ஆம் ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று 2018-19 ஆம் நிதியாண்டில், முதலமைச்சர் தெரிவித்தார்.

2019-20 ஆம் நிதியாண்டில், பல மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இதன்மூலம், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி பெறுவதற்கான ஆயிரத்து 200 கோடி ரூபாய் 2018-19 ஆம் ஆண்டு துறை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை”

2017-2018 ஆம் நிதியாண்டில், வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலைகளிலும், காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகைக்கு இணையாக, வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கான இழப்பீட்டு தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

2018-2019 ஆம் நிதியாண்டில், பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் சூழல் நட்பு வாழ்க்கையை அடையாளம் கண்டு, அவர்களின் கலாச்சார வலிமையை மேம்படுத்தவும், இயற்கை நட்பு வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், 7 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் மற்றும் பழங்குடியினர் சூழல் கலாச்சாரக் கிராமம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

2019-20 ஆம் நிதியாண்டில், சுற்றுச்சூழல் துறை பொதுமக்கள் சமூக கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கும் பொருட்டு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரிக் கரையை பலப்படுத்துதல், உபரி நீர் வீணாவதை தவிர்த்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகள், 25 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

“பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சிறுபான்மையினர் நலத்துறை”

2017 – 2018 ஆம் நிதியாண்டில், கிராமப்புற பெண்கள் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பு, 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

2018-2019 ஆம் நிதியாண்டில், சிறுபான்மை இன மக்களின் நலனை கருத்தில் கொண்டு கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்ல வழங்கப்படும் மானியத்தை போல, இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள, 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

2019 – 20 ஆம் நிதியாண்டில், இரண்டு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், இரண்டு மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் விடுதிகள் மற்றும் இரண்டு சிறுபான்மையினர் விடுதிகள் என மொத்தம் ஆறு கல்லூரி விடுதிகளில், 2 கோடியே 56 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

“தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திகள் தொடர்பு துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் தமிழர்களின் உயரிய பண்பாட்டு பாரம்பரியத்தினை பறைசாற்றும் வகையில், தமிழர் பண்பாட்டு பாரம்பரிய அருங்காட்சியகம் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த முதலமைச்சர், அந்த ஆண்டு முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழில் அறிவியல் கருத்துகளை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும், சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ”சிங்காரவேலர் விருது” ஆண்டுதோறும் சித்திரை தமிழ்புத்தாண்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

2018 ஜனவரி 11ஆம் நாள் வரலாற்று சிறப்புமிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50வது ஆண்டில் காலடி எடுத்து வைத்ததை முன்னிட்டு, அதனை தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக தமிழக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்

2018-19 ஆம் நிதியாண்டில், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு போற்றும் வகையிலும், சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை கலைத் தொண்டு, தமிழுணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும் வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

தன்னை ஈன்ற தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டி பெருமை சேர்த்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை புதுப்பித்தல் மற்றும் இதர புனரமைப்பு  பணிகளுக்காக 4 கோடி ரூபாய் செலவு  மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாட்சியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நடிகர் திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

“ஊரக வளர்ச்சி துறை”

2017 – 2018 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்பதை முதலமைச்சர் அறிவித்தார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 2017-18ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

2017 – 18 ஆம் ஆண்டில் விதி எண் 110 இன் கீழ் 7,000 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டதாக தெரிவித்த முதலமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2018-19ஆம் ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.

2019 – 20 ஆம் நிதியாண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பின் மூலம் 12ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்

“நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை”

2017 – 2018 ஆம் நிதியாண்டில், அடையாறு உப்பளங்களில் மற்றும் கழிமுகப் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது இதனை தொடர்ந்து வராக நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரையிலான 42 கிலோ மீட்டர் தூரத்தில் 555 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்

2018 – 19 ஆம் நிதியாண்டில், தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 217 கோடி ரூபாய் செலவில், 49 நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

2019 – 20 ஆம் நிதியாண்டில், நூற்றாண்டு கண்டு சரித்திரம் படைத்த விழுப்புரம் நகராட்சி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், குளங்கள் போன்றவைகளை மேம்படுத்திட 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

“இந்து சமய அறநிலையத்துறை” 

2017 – 18 ஆம் நிதியாண்டில், இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ், கிராமப்புறத்தில் கோவில்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

2018 – 19 ஆம் நிதியாண்டில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் தங்கும் விடுதி 30 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் நிதிலிருந்து கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

2019 – 20 ஆம் நிதியாண்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத ஆயிரம் கிராம புறத்தில் கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதி உதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்

“பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை”

2018-19 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 1-A, 1-B பணியிடங்களுக்கு, SC/ST/MBC/BC & DNC பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு, 35 லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு, 30 லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

2019-20 ஆம் நிதியாண்டில், மாநில தகவல் ஆணையத்திற்கு, விசாரணை அறைகள், அலுவலக அறைகள், மனுதாரர்கள் அறைகள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, ஐந்து தளங்களைக் கொண்ட சொந்த கட்டடம் 27 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

“கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை”

2017 – 18 ஆம் ஆண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில், 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

2018-19 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் திலேப்பியா மீன் வளர்ப்பு லாபம் தரக் கூடிய தொழில்கள் மாவட்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா 6 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறை நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த பல்துறை நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

“போக்குவரத்து துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அதிமுக அரசு, போக்குவரத்து கழகங்களில் 30-11-2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான, 750 கோடி ரூபாயை வழங்கும் என்பதை மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.

2019 – 20 ஆம் நிதியாண்டில், புதியதாக 2,000 பேருந்துகள் 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 2019-20ஆம் நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம், 10 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி நவீனப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

“மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை” 

2017-18 ஆம் நிதியாண்டில், தாய் சேய் நலனை பேணி காக்க விதமாக, மயிலாடுதுறை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 20 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 மேன்மைமிகு மையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் பெரிதும் தடுக்கப்படும் என்பதையும் முதலமைச்சர் தெரிவித்தார்

2018-19 ஆம் நிதியாண்டில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் நிறுவப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

2019-20 ஆம் நிதியாண்டில், தற்கொலைகளால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்காக 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணம் இல்லா 104 தொலைபேசி சேவை வழியாக ஆலோசனை வழங்கும் மையம் 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

“சட்டத்துறை, நீதிமன்றங்கள், சிறைத்துறை”

2017-18 ஆம் நிதியாண்டில், மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய நூலகக் கட்டடத்தை தரை தளத்திலும் உள்ளடக்கிய புதிய கட்டிடம் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

2018-19 ஆம் நிதியாண்டில், சிறைத்துறை சென்னை புழல் மத்திய சிறையில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

2019-20 ஆம் நிதியாண்டில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக 202.40 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

“பொதுப்பணித்துறை”

2018-19 ஆம் நிதியாண்டில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்பு சுவர் அமைத்து, அணைக்கட்டு பகுதியை மேம்படுத்துதல் மற்றும் நதியை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்றும் வருங்காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் தீர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்

2019-20 ஆம் நிதியாண்டில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019- 20ல், 499.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள ஆயிரத்து 829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக காவிரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் கால்வாய்களை சீரமைக்க 21 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

 

இதுபோன்று பல்வேறு துறைகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் அனைத்து நிதியாண்டுகளிலும் அறிவித்துள்ளார். குறிப்பாக, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்காக, 2017-18ஆம் ஆண்டில், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் 2017ம் ஆண்டு வழங்கப்பட்டு வந்த சிறு வணிக கடன் உச்சவரம்பை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்காக, 2017-18ஆம் ஆண்டில், வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த 11 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு, 13 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்காக, 2018-19ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மையமாகவும் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும் ”சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்

எரிசக்தித் துறைக்காக, 2019-20 நிதியாண்டில் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்களின் போது மின்கம்பங்கள் சாய்வதால் மின் விநியோகம் தடையாகும் சூழ்நிலை உருவாகும் நிலையை கலைந்து சீரான மின் வினியோகத்தை உறுதி செய்ய, 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகளில், முதற்கட்டமாக சுமார் 100 கிலோ மீட்டர் மின்பாதை 300 கோடி மதிப்பீட்டில் புதைவடங்களாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

தகவல் தொழில் நுட்பவியல் துறைக்காக, 2019-20 நிதியாண்டில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமல், குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’மக்கள் எண்’ திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், மக்களை தேடி அரசு என்னும் நோக்குடன் அரசு செயல்படுவதாக குறிப்பிட்டார். இதுபோன்று ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விரைவாகவும், துரிதமாகவும் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் இயற்றிய முத்தான சட்டங்களின் தொகுப்பை இனி காணலாம்..

2018 செப்டம்பர் மாதத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், அதை விட இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

2020 பிப்ரவரி மாதத்தில், காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த மசோதாவைத் தாக்கல் செய்வது தனக்குப் பெருமையாக இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

2020 செப்டம்பர் மாதத்தில், மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7 புள்ளி 5 சதவிகித உள் ஒதுக்கீட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தினார். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தள்ளிப்போட்ட நிலையில் கலந்தாய்வும் தள்ளிப்போனதால், மாணவர், பெற்றோர் மத்தியில் உருவாகும் நிம்மதியற்ற நிலையைக் கருத்தில் கொண்டு, 7 புள்ளி 5 சதவிகித உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் ஏராளமான அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாணவர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். மேலும் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ சேர்க்கை பெறும் மாணவ மாணவிகளின், படிப்பு செலவினைகளையும் அரசே ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மூலம் பெற்றோரும் ஆனந்த கண்ணீரில் மனநிறைவு அடைந்தனர்.

2021 பிப்ரவரி மாதத்தில், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், யாரும் எதிர்பார்க்காத நிலையில், நிலுவையில் உள்ள, கூட்டுறவு வங்கி விவசாய பயிர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,அதைதொடர்ந்து, பிப்ரவரி 26ஆம் தேதியன்று, ஏழை, எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை தங்க நகைகளை வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். கொரோனா பொருளாதார பாதிப்பினால், ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில், 6 சவரன் வரை நகைகளை வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

அரசு கல்வி நிலையங்களில், வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோல், சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 2 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். சாதிகள் குறித்த புள்ளிவிவர சேகரிப்பு பணி, 6 மாதத்தில் முடிந்த பின்னர், இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

2016 சட்டப்பேரவை தேர்தலின் போது புரட்சித் தலைவி ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும், அவரது நிழலாக இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியதோடு மட்டுமில்லாமல், அறிவிக்காத எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, வரலாற்றில், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீடித்த இடம் பிடித்துள்ளார் என்பதை காலமும் மறுக்காது…! 

 

 

 

 

 

 

 

Exit mobile version