சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உரையாற்றினர்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி தொடரவும், புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்திடும் வகையிலும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அதிமுக தேர்தல் பணிகளை தொடக்கி வைக்கும் மாபெரும் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடக்க ஊரையாற்றிய மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி என்றும், ஊழலில் திளைத்த இயக்கம் தி.மு.க. என்றும் அமைச்சர் விமர்சித்தார்.