தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை அனைவரும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 2013-ம் வருடம் இந்த இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான எடப்பாடி பழனிசாமி, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில், உமையாள்புரம் சிவராமன், கண்ணப்ப சம்பந்தன் உள்ளிட்டோர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் தரத்தை உலக அளவில் தரம் உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும் என தெரிவித்தார். மேலும், கவின்கலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வெளிநாடுகளைச் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அதிகளவில் பயின்று வருவதாகக் கூறினார்.
மேலும் முதல் முறையாக தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக மாணவிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.