திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பட்டதாரி இளைஞர், ஒரு சேவல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது என்கிறார். இது குறித்த சிறிய தொகுப்பினை தற்போது பார்க்கலாம்…
வீட்டுப் பிராணிகளில் எப்போதும் கோழிகளுக்கு முக்கிய இடம் உண்டு. குஞ்சு உற்பத்தி, முட்டை உற்பத்திக்காக கோழிகள் வளர்ப்பதோடு, சேவற்கட்டு எனப்படும் சேவல் சண்டைக்காக கோழிகள் வளர்க்கும் பழக்கமும் உண்டு. கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டு போல வெகு விமரிசையான நிகழ்ச்சி சேவற்கட்டு. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பது போல, சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. தற்போது சட்டங்களின் கெடுபிடியால்… சேவல் சண்டைகள் வெகுவாகக் குறைந்து விட்டாலும், சேவல் வளர்ப்பு குறையவில்லை. இப்படி அழகுக்காக வளர்க்கப்படும் சேவல்களில் முக்கியமானது, கிளிமூக்கு விசிறிவால் சேவல். கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ள இந்த ரகம், தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளம். மயிலைப் போல நீளமான வாலுடன் இரண்டு அடி உயரத்தில் கம்பீர தோற்றத்துடன் உள்ள இந்த ரக சேவல்கள், பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்கின்றன.
இந்த ரக சேவல்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. பல ஆண்டுகளாக இந்த ரக கோழிகளை வளர்த்து வருகிறார். திண்டுக்கல் பாறை பட்டியைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன். சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் அதிக லாபம் தரும் சண்டை சேவல் பயிற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தனது வீட்டுக்கு அருகிலேயே சிறந்த முறையில் பண்ணை அமைத்து விசிறிவால் கிளிமூக்கு உள்ளிட்ட அசில் வகை சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். பாரம்பரிய இனங்களை காக்கும் வகையில் இத்தகைய சேவல்களை வளர்த்து வருவதாகவும் ஒரு சேவல் ஐந்தாயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விலை போகும் எனக் கூறும் பாலமுருகன், வேலையை தேடி இளைஞர்கள் காத்திருக்காமல் தாங்களாகவே சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்கிறார்.
மேலும் சண்டை சேவல் மற்றும் அழகுக்காக சேவல் வளர்ப்பவர்கள் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து சேவல்களை வாங்கிச் செல்வதாகவும் கூறுகிறார். மேலும் தேவைப்படுவோருக்கு இலவசமாக ஆலோசனை அளிக்க இருப்பதாகவும் கூறுகிறார் பாலமுருகன்..