2019-20ம் ஆண்டுக்கான ஆயிரத்து 101 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
40வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது 2019 -2020ம் ஆண்டு நிலுவையாக உள்ள ஆயிரத்து 101 கோடியே 61 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். கடந்த 2017-18ம் ஆண்டு தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை நான்காயிரத்து 73 கோடி ரூபாயையும், 2018-19ம் ஆண்டுக்கான நிலுவை தொகை 553 கோடியே ஒரு லட்ச ரூபாயையும் மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆயத்த ஆடை மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் விரிவான விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.