கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. அதில், 9 மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய மேலும் இரண்டு மாவட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில், 20.5 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகவுள்ள புதிய மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக்கல்லூரிக்கு, 382 கோடி ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தெற்கு கிராமத்தில், 10.83 நிலப்பரப்பில் உருவாகவுள்ள மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக்கல்லூரிக்கு 347 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்போடு கட்டப்படவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.