பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும், போதை பொருட்களும் தமிழகத்துக்கு வருவதாக ஆளுநரே கூறியுள்ள நிலையில், 356வது சட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசை கலைப்பதற்கு ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதேசி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ஆங்கில நாளேடுக்கு ஒன்று பேட்டியளித்து உள்ள தகவல்களை சுட்டிக்காட்டி பேசினார். அதில் பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு போதை பொருட்களும், ஆயுதங்களும் சரளமாக கிடைப்பதாக ஆளுநரே தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், 356 சட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வருவது திராவிட மாடல் அரசு அல்ல, அது ஒரு திராவக மாடல் அரசு என்றும் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார். உண்மையில் திராவிட மாடல் அரசு என்றால், அது அதிமுக ஆட்சியில் நடந்த அரசுதான் என்றும் கூறினார். அதிமுக ஆட்சியில் தான் மக்கள் அனைவருமே சமமாக மதிக்கப்பட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்
Discussion about this post