ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயன்ற நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த காஷ்மீரில், இரு கட்சிகள் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு, ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை அறிவித்தன. இதனால் ஆட்சி அமைக்க உரிமைகோரி மெகபூபா முப்தி, ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.
ஆனால் அந்த கடிதத்தை ஆளுநர் மாளிகை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தொலைப்பேசி மூலமாக ஆளுநரை தொடர்பு கொள்ள முயன்றும், முடியவில்லை என மெகபூபா தெரிவித்தார். இந்நிலையில் சஜ்ஜாத் லோன் என்பவர் பா.ஜ.க. ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க உள்ளதாக ஆளுநரிடம் உரிமை கோரினார். இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக, சட்டப்பேரவையை கலைப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவிப்பை வெளியிட்டார்.
குதிரை பேரத்தை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இது ஜனநாயக படுகொலை என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.