தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.

மத்திய அரசால் முதல்முறையாக வெளியிடப்பட்ட நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டில் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதையும், ‘இந்தியா டுடே’ பத்திரிகையின் ஆய்வில், ‘ஒட்டு மொத்த செயல் திறன் மிக்க மாநிலம்’ என்று தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட ஆளுநர், இந்த சாதனைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குறிக்கோள்களை இந்த அரசு அடைந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இதுவரை 453 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், அதில், 114 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 303 அறிவிப்புகள் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பல்வேறு தடைகளை கடந்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அரசு முறையாக நடத்தியுள்ளதாகவும், மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் நாட்டிலேயே ‘சிறந்த செயல்திறன் மிக்க மாநிலம்’ என்ற தரநிலையை தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம் மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற பெரிய நிகழ்வுகள் அனைத்துக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றதாக தனது உரையில் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றதை குறிப்பிட்ட ஆளுநர், மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகவும், இதற்காக 563 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் நலனை உறுதியுடன் பாதுகாக்க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், கர்நாடக அரசின் மேக்கேதாட்டூ திட்ட அறிக்கையை நிராகரிக்கவும், நீரோட்டத்தை மாற்றி அமைக்கும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருவதாக தனது உரையில் ஆளுநர் தெரிவித்தார்.

பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் மற்றும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுக்காண, திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக முதலமைச்சரின் முயற்சியை ஆளுநர் பாராட்டி உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளதை குறிப்பிட்ட ஆளுநர், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 7 கோடியே 85 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைத் திறந்துவிட்ட ஆந்திர அரசிற்கு ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்றும், தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது 2018 மற்றும்2019ஆம் ஆண்டுகளில் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், இலங்கை சிறையில் உள்ள 17 மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசியவர், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், முன்னோடி திட்டமாக திகழ்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தாம்பரம் – வேளச்சேரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க15 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளதாகவும், 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், முன்னோடி திட்டமாக திகழ்வதாக தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 5 லட்சத்து 18 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். புதிதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அரசு நிர்வாகம் மக்களிடம் நெருங்கிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

மூக்கையூரில் 120 கோடி செலவிலும், குந்துக்கல்லில் 100 கோடி செலவிலும் மீன்பிடித் துறைமுகங்கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் 100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ளதாகவும், திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி மற்றும் முதுநகரில் 420 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

பன்முகப் பொருளாதாரம், எளிதாக தொழில் செய்தல், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அரசு, எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சர் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் தனது குறிப்பிட்டார்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் தொடர்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், 17 ஆயிரத்து 850 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை நிறுவும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 13 ஆயிரத்து 319 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனைக் கொண்டு உலளவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய இருக்கும் கிளாம்பாக்கம் வரை 15 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. தாம்பரம் – வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 புள்ளி 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்று அமைக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரிக்கும் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 84 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், 9 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் 3 ஆயிரத்து 267 கோடியே 25 லட்சம் செலவில் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version