நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க. அரசின் மெத்தனத்தால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதலமைச்சரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவாக இன்று மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசு எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது என்று விமர்சித்துள்ள அவர், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர, அதிமுக அரசு செயல்படுத்தயி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி, உறுதுணையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.