நீர்நிலைகளை புனரமைக்க அரசு மேற்கொண்டு வரும் பணிகள்- ஓர் பார்வை

தமிழகத்தில் நீர்நிலைகளை புனரமைத்து, நீராதாரங்களை பெருக்க, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து காணலாம்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள நீர்நிலைகளை கணக்கெடுக்கும் பணிக்கு உத்தரவிட்டப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் நீர் நிலைகளை புனரமைத்து நீராதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாத 210 நீர்நிலைகளை கண்டறிந்து புனரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அவற்றில் 53 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது. அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போன்று, சமூக பொறுப்புள்ள தனியார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க ஊக்கப்படுத்தி அவர்களிடம் 38 நீர்நிலைகளை ஒப்படைத்து, அதில் 16 நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

கோவளம் வடிநிலப் பகுதியில் 16 பெரிய நீர்நிலைகளையும், 68 சிறிய நீர்நிலைகளையும், கொசஸ்தலையாறு வடிநிலைப்பகுதியில் உள்ள 5 பெரிய நீர்நிலைகள் மற்றும் 65 சிறிய நீர்நிலைகளையும் ஒருங்கிணைத்து நீர் ஆதாரத்தை பெருக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மட்டுமின்றி கூடுதலாக 100 நீர்நிலைகள் புனரமைக்கும் பணிக்கான இறுதி அறிக்கையை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் மூலம் தயார் செய்து வருகிறது. அடுத்தக்கட்ட நீர்நிலை புனரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது.

நீராதாரங்களை பெருக்க சென்னையில் உள்ள அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதிகளில் 80 மழைநீர் சேகரிப்பு கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகளை பாராட்டும் விதமாக வெளிநாட்டு அமைப்புகளான RC100, C40 போன்ற அமைப்புகள் வெளிநாடுகளில் நடக்கும் நீர்நிலைகள் பாதுகாக்கும் கலந்தாய்வு கூட்டங்களில் தமிழக அதிகாரிகளை சிறப்புரை வழங்க அழைப்பு விடுத்து, கவுரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version