கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப அரசு செயல்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் 9 ஆயிரத்து 422 மாணவ, மாணவிகளுக்கு 11 கோடியே 57 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 63 அரசு பள்ளிகளை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 8 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை அமைச்சர்கள் வழங்கினர். வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் பள்ளிகளுக்கு தேசிய பசும்மைப்படை சிறப்பு நிதி ஆகியவற்றையும் அமைச்சர்கள் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் பொது மக்களின் கருத்திற்கு ஏற்ப தமிழக அரசு செயல்படும் என்றார்.