அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, கடந்த கல்வியாண்டில் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த 72 தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொட்டில் குழந்தைகள் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினர், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.
பின்னர் விழாவில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக கூறினார். நாமக்கல் கல்வி மாவட்டம் என்பதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.