புற்று நோயை குணப்படுத்த அதிநவீன மருத்துவ கருவிகளை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு

அச்சுறுத்தும் நோயான புற்று நோயை குணப்படுத்த, லீனியர் ஆக்ஸிலரேட்டர்கள் எனப்படும் அதிநவீன கருவிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அமெரிக்காவில் கிடைக்கும் சிகிச்சைக்கு இணையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கப்போகும் இந்த சிகிச்சை குறித்து தற்போது காணலாம்.

புற்று நோயானது, ஓர் உயிர் கொல்லி நோயாக அறியப்பட்டாலும் ஆரம்ப நிலையில் இதனை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்று பயனடைந்தவர்கள் பலர் உண்டு. வாழ்வியல் முறைகளில் மாற்றம், மாசு நிறைந்த சூழலியல், தவறான உணவு பழக்கம் என பல காரணங்களால் புற்று நோய்க்கு நாம் ஆளாகிறோம்.

இந்த கொடிய நோயை குணப்படுத்த பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணுசக்தி ஆணையத்தின் அனுமதியுடன் கூடிய, ஒரு கதிரியக்க சிகிச்சை முறையை சுகாதாரத்துறை அறிமுகம் செய்ய உள்ளது.

லீனியர் ஆக்ஸிலரேட்டர்கள் என்று சொல்லக்கூடிய கதிரியக்க சிகிச்சை கருவி மூலம் அமெரிக்காவில் ஏராளமான நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த கதிரியக்க சிகிச்சை முறை இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

இந்த நவீன கருவி மூலம், சிகிச்சை அளிக்கும் போது மற்ற உறுப்புகளுக்கு கதிர்வீச்சு பாதிப்பானது 10 சதவீத அளவுக்கே இருக்கும் என்கிறார்கள். மிகத் துல்லியமான முறையில், புற்று நோய் பாதித்த இடத்தில் மட்டும் சிகிச்சை அளிக்க இக்கருவி பயன்படுகிறது. தமிழகத்தில் இந்த சிகிச்சை முறையை வரும் டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

புற்று நோய் தாக்கத்தை 4 நிலைகளாக பிரிக்கும் மருத்துவர்கள், முதல் மூன்று நிலைகளை குணப்படுத்த முடியும் என்றும் 4ம் நிலையே சிக்கலானது என்றும் கூறுகிறார்கள். அப்படி 4ம் நிலையில் உள்ள நோயாளிகளையும் அரசு கைவிட்டு விடுவதில்லை. மிக கடுமையான வலியால் அவதிப்படும் அந்த வகையினருக்கு வலி நிவாரண சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை, அரசு மருத்துவ மனைகளில் 64 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது.

புற்று நோயால் பாதித்தவர்கள் பலர் தங்களது இறுதி நாட்களை வலியுடன், வீட்டிலேயே கழிக்கின்றனர். இவர்களை பரிவுடன் கவனிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தப் போகிறது. புற்று நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சையளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. ஒன்றியத்திற்கு ஒரு பிஸியோதெரபிஸ்ட் என 385 ஒன்றியங்களிலும் வீடுதோறும் சென்று சிகிச்சை அளிக்கப்போவதாக கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்தியாவின் மருத்துவ தலைநகர் என சென்னை அறியப்படுகிறது. அந்த அளவுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மற்றொறு மைல் கல் தான் இந்த புதிய திட்டங்கள் என்றால் அது மிகையல்ல.

Exit mobile version