வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பருவந் தவறிப் பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் அழுகிச் சேதமடைந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இந்நிலையில் உள்நாட்டுச் சந்தையில் வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே எகிப்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ள 6 ஆயிரத்து 90 டன் வெங்காயம் டிசம்பர் மாத நடுப்பகுதியில் வந்து சேரும் என மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோலத் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு அரசுத் துறை நிறுவனமான எம்எம்டிசி ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த வெங்காயம் டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாதத் தொடக்கத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் உள்நாட்டில் இருந்தும் புதிய வெங்காயம் வரத்து தொடங்கிவிடும் என்பதால் ஜனவரி மாதத்தில் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது.

Exit mobile version