அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில், 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பணி நியமனம் பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்துக்கும், தங்களது துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், நேர்மையாகவும், திறமையாகவும் பணிபுரிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.