தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 240 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். பல்வேறு சிறப்பு திட்டங்களால் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளிக் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.
இலவச நோட்டு, புத்தகங்கள், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் வண்ணச் சீருடைகள், காலனிகள், ஸ்மார்ட் கார்டு திட்டம் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது. தனியார் பள்ளிகளை முந்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியும் பயிற்று விக்கப்படுகிறது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளும் துவங்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் தமிழக அரசு பள்ளிகளில் மொத்தம் 66 லட்சத்து 44 ஆயிரத்து 424 மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 68 லட்சத்து 15 ஆயிரத்து 664 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த கல்வியாண்டை விட 1 லட்சத்து 71 ஆயிரத்து 240 மாணவர்கள் அதிகமாகும்.
தொடக்கப் பள்ளிகளில் 47 ஆயிரத்து 706 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். நடுநிலைப் பள்ளிகளில் 61 ஆயிரத்து 618 மாணவர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 34 ஆயிரத்து 532 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 27 ஆயிரத்து 384 மாணவர்களும் அதிகமாக சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு அபரிமிதமான மாணவர் சேர்க்கையை நடத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது. இதற்கு தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்வே காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.