தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம் வாய்ந்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டு வலசு பகுதியில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் பள்ளி பணி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பள்ளி கட்டிட திறப்பு விழாவை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்போது இப்பள்ளி கட்டிடத்தில் பணிகள் துவக்க விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
அரசு பள்ளிகளில் பயின்ற இவர்கள் தான் தற்போது திறமையானவர்களாக உள்ளனர். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளி ஆசிரியர்களே தகுதியும் பயிற்சியும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். தற்பொழுது பெற்றோர்களும் அதிக அளவில் அரசு பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளை சேர்க்க விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றும் தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தற்போது சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் மாணவ மாணவிகளுக்கு காலணி வழங்கும் திட்டமும் உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் ரகுநாதன், தனி வட்டாட்சியர் கதிரேசன் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.