தனியார் பள்ளியை விட 100 மடங்கு சிறப்பாக இயங்கு வரும் அரசு பள்ளி.
தனியார் பள்ளிகளை நோக்கி லட்ச லட்சமாக பெற்றோர்கள் பணத்தை கொட்டி வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் எல்லாம் எம்மாத்திரம் எங்க அரசு பள்ளியை வந்து பாருங்கள் என பல அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
அவ்வாறு பல நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கி வரும் இப்பள்ளியில் 133 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை, பள்ளி நூலகம், உள்விளையாட்டுகள், வெளிவிளையாட்டுகள், கணினி, கல்வி உள்ளிட்ட வசதிகள் இப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் கை மற்றும் பாத்திரங்கள் கழுவும் தண்ணீரை வீணாக்காமல் பள்ளியை சுற்றி காலியாக உள்ள இடங்களில் தோட்டம் அமைத்து வாழை, அவரை, பூசணி, முருங்கை மலர் வகைகள் ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவித்துவருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட வாழை, பூசணி, நெல்லி ஆகியவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து அந்த தொகையை பள்ளியினை மேம்படுத்த பயன்படுத்துகின்றனர். இதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட கிச்சிலி காய்களை கொண்டு ஊறுகாய் தயார் செய்த பள்ளி மாணவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவில் கலந்து வழங்குகின்றனர்.
இதனால் பள்ளியில் கல்வி மட்டுமல்லாமல் நீர் மேலாண்மை, நீர் சிக்கனம், இயற்கை விவசாயம் ஆகிய திறன்களை மாணவர்களுக்கு கற்றுதருவதாக தலைமையாசிரியர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டும் மக்கள் இது போன்ற மாணவர்களால் தான் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை நிலை நிறுத்த முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளி செயல்படுகிறது என்று கூறுவதை விட தனியார் பள்ளிகளுக்கு மேலாக இந்த அரசுப்பள்ளி தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுவதே சரியாக இருக்கும்