தனியார் பள்ளியை மிஞ்சும் அரசு ஊராட்சி ஆரம்ப தொடக்கப்பள்ளி

நீலகிரியை அடுத்த அவ்வூர் கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒழுக்கம், கல்வி, விளையாட்டு, நடனம் மற்றும் நடிப்பு என ஒட்டுமொத்த மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவ்வூர் மலைக் கிராமத்தில் உள்ளது அரசு ஊராட்சி ஆரம்ப தொடக்கப்பள்ளி. 4-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் தற்போது 64 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், பழங்குடி மற்றும் ஏழை குழந்தைகளே கல்வி பயில்கின்றனர்.

தலைமை ஆசிரியருடன் சேர்த்து மூன்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்த இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம், கல்வி நன்னடத்தை, தூய்மை மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை முதலில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் தனியார் பள்ளிகளை போன்று இங்கு கையெழுத்து பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்தப் பள்ளியில், குறிப்பாக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கென்று தனியார் தொண்டு நிறுவனங்கள் வாகன வசதிகளையும் இலவசமாக ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் சிறப்பாக இப்பள்ளியின் மாணவர்களின் திறமைகளை கண்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு தேவையான கேரம்போர்டு மற்றும் இசைக்கருவிகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

கேரம் விளையாட்டில் மாவட்ட அளவில் இப்பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. தொலைக்காட்சி பேச்சரங்குகளில் இப்பள்ளி மாணவர்கள் பலமுறை பங்கேற்றுள்ளனர்.குறிப்பாக, இப்பள்ளியின் சிறப்பு அம்சமாக, ஹூலா ஹூப் என்ற வளையத்தை உடலில் சுழற்றிக்கொண்டு ஒயிலாட்டம், பறையாட்டம் ஆகியவற்றிற்கு ஆசிரியர்கள் தனி பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இதற்கான இசையையும் மாணவர்களே இசைக்கின்றனர்.

மேலும், அவ்வூர் பள்ளியில் ஜமாப் இசைக் கருவிகளை சொந்தமாகவே வைத்திருக்கின்றனர். மாணவர்களே அவற்றை இசைக்கின்றனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள pre KG மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கு CBSE தரத்துடன் கூடிய பாடத்திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறன் மேன்மையடைவதோடு மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை மாற்றும் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version