நிவர் புயல் தாக்கத்தை அடுத்து தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக இன்றே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், புயல் தாக்க வாய்ப்புள்ள மாவட்டங்களான, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாட்களுக்கு 144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 26ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அடுத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.