நெருங்கும் நிவர் புயல் – துரிதகதியில் நடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் காரணமாக இன்று இரவில் இருந்தே கனமழை பெய்யக்கூடும் என்பதால், நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தங்கியுள்ள, கிராம மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அளக்குடி, முதலைமேடு, நாதல் படுகை, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களை பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மயிலாடுதுறை சிறப்பு அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் சென்னையில் இருந்து சீர்காழிக்கு சென்றடைந்தனர். சீர்காழி காவல்நிலையத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினர், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, கொள்ளிடம் ஆற்று கரையோரமும், பழையார் கடற்கரை பகுதிக்கும் அனுப்பப்பட உள்ளனர்.

மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலைகளை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டிணத்தில், புயல் பாதுகாப்பு மையம் அமைக்கும் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முகாமைச் சுற்றிலும் பள்ளமாக உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு மண் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது. சாக்கு மூட்டைகளில் மண்ணை கட்டும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடலோர கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன

அரியலூர் மாவட்டத்தில் திருமானுர், மேலராமநல்லூர், வைப்பூர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருமண மண்டபங்களுக்கு செல்லுமாறு, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் ஆய்வுசெய்த அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், பாய், போர்வை போன்றவற்றை வழங்கினார். தேவையான பொருட்களை இருப்பில் வைத்திருக்கவும் அறிவுரை வழங்கினார்.

Exit mobile version