சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை தரமணியில் உள்ள பெரியார் நகர், பாரதி நகர் பகுதிகளில் கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், தேங்கியிருந்த தண்ணீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து வேளச்சேரி சென்ற துணை முதலமைச்சர், ராம்நகர் பகுதியில் ஆய்வு நடத்தினார். தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், வேளச்சேரி அம்பேத்கர் நகரில் உள்ள நிவாரண மையத்திற்குச் சென்று, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோல சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வழங்கினார். பின்னர் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Exit mobile version