தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை மறுசீரமைக்க ஜெர்மனி ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி செய்யும் என அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் இந்தோ ஜெர்மன் வணிகக் கூட்டமைப்பின் 63ஆவது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, நகர்ப்புறத்தில் மாசில்லாத போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக ஏழாயிரத்து 70 கோடி ரூபாயை ஜெர்மனி இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு ஜெர்மனி ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய இருப்பதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு, டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியுள்ளதையும் ஏஞ்சலா மெர்க்கல் சுட்டிக்காட்டினார்.