தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கடந்து 5 ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, நிதி ஆதாரம் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இச் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவும், லாபகரமானதாக மாற்றவும் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடைநிலை மூலதன உதவி, வங்கியில் கடன் பெறுவதற்கு தமிழக அரசே வழங்கும் கடன் உத்தரவாதம், சலுகையுடன் கூடிய சுழல் நிதி ஆகியவற்றை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வலுப்படுத்தி, வணிக ரீதியாக வளரும் வகையில், அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்த 266 கோடியே 70 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் வேளாண் பெருமக்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.