பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 22 ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், மாநிலத்தின் கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும் தவிர்த்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது, பொதுமக்கள் நலன் கருதி தடைசெய்யப்பட்டு ஏற்கனவே ஆணை வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிருந்தே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஆணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களிடமும் கேட்டுக் கொள்ளப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.