கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், பலர் மாயமாகினர். இதுவரை தமிழர்கள் 10 பேர் உட்பட 37 பேர் பலியாகி உள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மூணாறு பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து கேரள முதலமைச்சரிடம் ஆலோசித்ததாக குறிப்பிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.