கொரோனா பரவல் காரணமாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டோரை ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், சர்க்கரை நோய் மற்றும் இதயநோய் உள்ளவர்களை பணியில் அனுமதிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும், குடிநீர், உணவு, தின்பண்டங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தொற்று உறுதியானாலும், உடன் பணியாற்றும் அனைவரும் கொரேனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.