தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியை மாணவர்களுடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.
வேங்கிக்கால் புதூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஸ்மார்ட் கிளாஸ்,குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வாசிப்பு திறனை மேம்படுத்த வாசிப்பு அறை,தொலைக்காட்சி பெட்டி, சிசிடிவி கேமராக்கள், காய்கறி தோட்டம், மடிகனிணி என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் கட்டப்பட்ட அரசு பள்ளியை மாணவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார். இந்தப் பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் நேரடியாக இணைக்கப்பட்டு இரு பள்ளி மாணவர்களும் பாடம் கற்பிக்கும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு நிகராக தரம் மற்றும் கட்டமைப்பு அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.