கொரோனா வைரஸ் பரவலை முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவினை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள டிஎம் எஸ் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை முதல் கட்டத்திலேயே தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்று தெரிவித்த அவர், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய 200 ஆம்புலன்ஸ்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.