அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் – சி.வி.சண்முகம்

விழுப்புரம் அரசு மருத்துவமனை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் அரசு மருத்துவமனை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது எனவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதில் 3 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அரசின் அறிவிப்பை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்தார்.

Exit mobile version