கடந்த 3 நாட்களில் தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருந்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செவிலியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் கடந்த 3 நாட்களில் தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செவிலியர் சாமுண்டீஸ்வரி, ஏற்கனவே இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்தவர் ஆவார். அவருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும், மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சண்முகப் பிரியா, சென்னை செவிலியர் இந்திரா, வேலூர் செவிலியர் பிரேமா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இவர்களோடு சேர்த்து 3 நாட்களில் கொரோனா தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றின் வீரியத்தால், செவிலியர்கள் மரணம் தொடர்வதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version